/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்தியமா... இது பாசன கால்வாய் தானுங்க! பரிதாப நிலையில் பாசன திட்டம் : ஆழியாறு விவசாயிகள் அதிருப்தி
/
சத்தியமா... இது பாசன கால்வாய் தானுங்க! பரிதாப நிலையில் பாசன திட்டம் : ஆழியாறு விவசாயிகள் அதிருப்தி
சத்தியமா... இது பாசன கால்வாய் தானுங்க! பரிதாப நிலையில் பாசன திட்டம் : ஆழியாறு விவசாயிகள் அதிருப்தி
சத்தியமா... இது பாசன கால்வாய் தானுங்க! பரிதாப நிலையில் பாசன திட்டம் : ஆழியாறு விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 15, 2025 10:04 PM

பொள்ளாச்சி; நம்புங்க... இது கால்வாய் தானுங்க என சொல்லும் அளவுக்கு மரங்கள், புதர் சூழ்ந்து,ஆழியாறு பாசனத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி பிரதான கால்வாய் பரிதாப நிலையில் உள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், பாசன வசதி பெறும் வகையில், கடந்த 1962ம் ஆண்டு ஆழியாறு அணை கட்டப்பட்டது. 120 அடி உயரம் உள்ள அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும், குடிநீர் ஆதாரங்களுக்கும் கைகொடுக்கிறது.
பி.ஏ.பி., திட்டத்தில், ஆழியாறு நீர் தேக்க திட்டத்தில், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆழியாறு ஊட்டுக்கால்வாயின் பிரதான கால்வாய், 13.40 கி.மீ., கிளை கால்வாய், 62.90 நீளம் கொண்டது.
சேத்துமடை கால்வாய் பாசனத்தில், பிரதான கால்வாய், 8.40 கி.மீ.,; அதன் கிளை கால்வாய், 25.89 கி.மீ., தொலைவுள்ளது. வேட்டைக்காரன்புதுார் பிரதான கால்வாய், 17.40 கி.மீ., அதன் கிளை கால்வாய், 45 கி.மீ., துாரம் கொண்டதாகும். ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய், 48.73 கி.மீ., நீளம் கொண்டதாகும்.
உருமாறியது
பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன.
இந்த கால்வாய் கட்டப்பட்ட பின், முழு அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், போதிய பராமரிப்பின்றி உருக்குலைந்து காணப்படுகின்றன. பல இடங்களில், கால்வாய் இருப்பதே அடையாளம் தெரியாத அளவுக்கு புதர் மண்டி காணப்படுகின்றன. இதுபோன்று, கிளை கால்வாய்களும் போதிய பராமரிப்பின்றி சேதமாகியுள்ளன.
மேலும், குப்பை உள்ளிட்ட கழிவு கொட்டும் இடமாக மாறியுள்ளது. பாசன காலங்களில் நீர் முழுமையாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
அறிவிப்பு மாயம்
பிரதான மற்றும் கிளை கால்வாய்கள் அருகே, நீர்வளத்துறை சார்பில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், மதகு எண், மொத்த பாசனம், மதகுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த பலகையில், விவரங்கள் அழிந்து போய் உள்ளதால், எந்த கிளை கால்வாய் என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
மேலும், சில இடங்களில் அறிவிப்பு பலகைகள் மாயமாகி வெறும் துாண்கள் மட்டுமே உள்ளன.
நடவடிக்கை தேவை
விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., பாசனத்தில், பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. கால்வாய் ஓரத்தில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்கள் கரைகளை சேதப்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்னைகளால், கால்வாயில் முழு அளவில் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆண்டுதோறும், கால்வாய்களில் புதர் மண்டியிருப்பதை அகற்ற நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. பாசன காலங்களில் தண்ணீர் கடைமடை வரை கொண்டு செல்வது பெரும்பாடாக உள்ளது.எனவே, பிரதான, கிளை கால்வாயை முழுமையாக பராமரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு கொட்டாமல் இருக்க கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.