ADDED : ஏப் 11, 2025 10:47 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டையில் 'பயோ ரெமிடியேஷன்' தொழில்நுட்பம் வாயிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக 'நல்ல தண்ணி' என்ற திட்டம் துவங்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், கோவை மாநகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டையில், 'பயோ ரெமியேஷன்' முறையில், கழிவு நீர் சுத்திகரிப்பு பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்து பேசுகையில், கோவை மாநகராட்சி சிறுதுளி அமைப்புடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. கோவை மாநகராட்சியுடன் கடைசியாக இணைந்த பகுதிகளான துடியலூர், சரவணம்பட்டி, வடவள்ளி, வெள்ளக் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஆங்காங்கே சாலைகளை வெட்டி குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில் பெறப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்பு தூய்மையான கோவையை நாம் பார்க்க முடியும்.
வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற சிறப்பு இணைப்புகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், கழிவுநீர் ஒரு இடத்தில் தேங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்தும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் டிரைடெண்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
