/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்தை மாசுபடுத்தும் சாக்கடை கழிவு நீர்.. பாழாகும் கிணறுகள்; விவசாய பணி பாதிப்பு
/
வனத்தை மாசுபடுத்தும் சாக்கடை கழிவு நீர்.. பாழாகும் கிணறுகள்; விவசாய பணி பாதிப்பு
வனத்தை மாசுபடுத்தும் சாக்கடை கழிவு நீர்.. பாழாகும் கிணறுகள்; விவசாய பணி பாதிப்பு
வனத்தை மாசுபடுத்தும் சாக்கடை கழிவு நீர்.. பாழாகும் கிணறுகள்; விவசாய பணி பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2025 08:52 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஓடந்துறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணற்று நீர் உபயோகித்தால், அரிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலம் அருகே ஊட்டி சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள் உள்ளன. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதி ஓடந்துறை ஊராட்சியை ஒட்டி அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னுார் மலைப்பகுதிகளின் எல்லையாகவும் ஓடந்துறை உள்ளது. வனப்பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன.
ஊட்டி சாலையில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், கடைகள் போன்றவற்றின் சாக்கடை கழிவு நீர் இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் விடப்படுகின்றன. இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பலமுறை ஓடந்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு வனத்துறை அறிவுறுத்தியும், சாக்கடை கழிவுநீரை வனத்திற்குள் செல்லாமல் இருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வனத்துறையினர் அதிரடியாக அண்மையில் கழிவுநீர் செல்லும் பாதையை மண் கொட்டி அடைத்தனர்.
இதனால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனாலும் ஓடந்துறை ஊராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த மண் பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டது. இதனால் மீண்டும் வனத்திற்குள் கழிவு நீர் சென்று தேங்கி நிற்கிறது. இதை வனவிலங்குகள் குடிப்பதால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், கிணற்று நீர் மாசடைந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'வனத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கிணற்று நீர் மாசடைந்துள்ளது. தண்ணீரின் நிறம் மாறவில்லை ஆனால் தரம் மாறிவிட்டது.
கிணற்று நீரில் குளிக்கும்போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது. வனத்திற்குள் கழிவுநீர் செல்லாமல் தடுக்க வேண்டும்' என்றனர்.