ADDED : நவ 03, 2024 11:01 PM

சீரமைக்கப்படாத பள்ளம்
ஒண்டிப்புதுார், சுங்கத்திலிருந்து சூர்யா நகர் ரயில்வே கிராசிங் ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்கின்றனர். தண்ணீர் இணைப்பிற்காகத் தோண்டப்பட்ட பள்ளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. மழைகாலங்களில் குண்டும் குழிகளில், தேங்கியிருக்கும் மழைநீரில் வண்டியில் பெரியவர்களும், குழந்தைகளும் விழும் சூழல் தொடர்கிறது.
-நாராயணன், சூர்யா நகர்.
சேறும் சகதியும்
வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பேஸ்1 பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட இடங்கள் சீரமைக்கப்படவில்லை ஒவ்வொரு 50 மீட்டருக்கும் சேறும் சகதியுமாக உள்ளது. வீடுகளுக்குள் செல்ல முடியாத அளவில் மழை நேரங்களில் சிரமப்படுகின்றோம். களிமண் என்பதால் நடப்பதற்கு கூட முடிவதில்லை. இதற்கு உரிய தீர்வு வேண்டும்.
- கணேசன், வெள்ளக்கிணறு.
சுகாதார சீர்கேடு
வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், சாக்கடை அடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக கழிவுகள் தேங்கியுள்ளன. சாக்கடை அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் செல்லும் பாதையை சீர் செய்து தரவேண்டும்.
- வனஜா, கோவை.
தடையால் தடுமாற்றம்
கோவைப்புதுார், வார்டு 90ல் பல இடங்களில் வேகத்தடைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லாததால், விபத்துக்கள் ஏற்படுகிறது. வேகத்தடை இருப்பதற்கான குறியீடு ஏற்படுத்தவேண்டும்.
- பிரபாகரன், கோவைப்புதுார்.
தெரு விளக்கு எரிவதில்லை
ஜி.என்.மில்ஸ் சாஸ்திரி நகரில் தெருவிளக்குகள் கடந்த இரண்டு மாதங்களாக எரிவதில்லை. இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு சென்று வருவதில் சிரமங்கள் எழுந்துள்ளன.
- லட்சுமி,ஜி.என்.மில்ஸ்.
சாலையை காணோம்
பீளமேடு துக்கினார் வீதியில் வளர்ச்சி பணிக்காக சாலை தோண்டப்பட்டு ஒரு புறம் மட்டும் சீரமைத்துள்ளனர். ஒரு புறம் பணிகள் முடிக்கப்படாமல், பாதியில் விடப்பட்டுள்ளது. துக்கினார் வீதியின் ஒரு புற சாலை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், சாக்கடை கழிவுகள் சாலையிலேயே குவிக்கப்பட்டுள்ளதால், மழை நேரங்களில் நடக்கமுடிவதில்லை.
- லவ்லினா, பீளமேடு.
விபத்து அபாயம்
கோவை கவுண்டம்பாளையம் அரசு குடியிருப்பில் ரோடு மோசமான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல குச்சி ஊன்றிவைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் முன் சீரமைக்கவேண்டும்.
- செல்வராஜ்-, கவுண்டம்பாளையம்.