ADDED : ஆக 03, 2025 09:19 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரட், மூட்டை கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைகாய்கறிகள் வருகின்றன. இங்கு கொண்டுவரப்படும் காய்கறிகள் கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடிப்பெருக்கு காரணமாக மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்தன.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:
ஆடிப்பெருக்கு காரணமாக காய்கறிகளின் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. 3 ஆயிரம் மூட்டை கேரட் வரும் இடத்தில் நேற்று 2 ஆயிரம் மூட்டைகள் வந்தன. இதுபோல் தான் பீட்ரூட், பீன்ஸ், முட்டை கோஸ் போன்ற மலைக் காய்கறிகளின் வரத்தும் குறைந்தது. இதனால் விலை சரிவின்றி ஒரு கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து காய்கறிகள் விற்பனை ஆகின. நேற்று ஒரு கிலோ கேரட் ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.45 வரையிலும், பீன்ஸ் ரூ.65 முதல் ரூ.75 வரையிலும், விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.இவ்வாறு கூறினர்.---

