/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை தீவனம் தட்டுப்பாடு; விவசாயிகள் சோகம்
/
கால்நடை தீவனம் தட்டுப்பாடு; விவசாயிகள் சோகம்
ADDED : மார் 20, 2024 12:00 AM

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர். அன்னூர், காரமடை, மதுக்கரை, செட்டிப்பாளையம், சூலூர், மேட்டுப்பாளையம், ஆணைமலை, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறவை மாடுகள், ஆடுகள், நாட்டு கோழிகள் என 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளின் முக்கிய வாழ்வாதார ஆதாரமாக கால்நடைகள் உள்ளன.
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் கால்நடை தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, தீவனங்களின் விலை உயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து காரமடை அருகே மாதப்பனூரில் உள்ள ஸ்ரீ பகவத் இராமனுஜர் கோ ரக்ஷண சாலா, கோசாலை பராமரிப்பாளர் சடகோப இராமனுஜ தாசன் கூறியதாவது: வெயில் வாட்டி வதைத்து வருவதால் கால்நடைகளின் முக்கிய தீவனமான புற்கள், சோளதட்டை, புண்ணாக்கு, தவிடு போன்ற தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவனங்களின் விலையும் உயர்ந்து வருகிறது. புற்கள் ஒரு கிலோ ரூ.15ல் இருந்து ரூ.24 வரை உயர்ந்துள்ளது. புண்ணாக்கு ஒரு மூட்டைக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது. சோளத்தட்டை, தவிடு என அனைத்துமே எப்போதும் வாங்கும் விலையை விட ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது.
வைக்கோல் கிடைப்பதே அரிதாகி விட்டது. கிடைத்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் கால்நடைகள் வளர்ப்போர் கடும் அவதியடைந்து வருகின்றனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றாலும் தேவையான தீவனம் கிடைப்பது இல்லை. இதனால் சில விவசாயிகள் குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறி கழிவுகள், உருளைக்கிழங்கு கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாக தருகின்றனர். இதனால் கால்நடைகளின் உயிர்களுக்கே கூட ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதி கால்நடை விவசாயிகள் கூறுகையில், கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆறு, குளம், கிணறு என அனைத்தும் வறண்டு வருகிறது. இதனால் குறைந்த அளவே தண்ணீர் காட்ட முடிகிறது.
கால்நடை தீவனங்களின் விலை தற்போதே அதிகரித்துள்ளதால், இனி வரும் நாட்களில் கடும் தட்டுப்பாடு ஏற்படும். மாவட்ட நிர்வாகம் இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றனர்.-

