UPDATED : நவ 29, 2026 07:36 PM
ADDED : நவ 29, 2026 07:36 PM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே, தேக்கம்பட்டி செல்லும் சாலையில், யானைகள் புத்துணர்வு நல வாழ்வு முகாம் நடைபெற உள்ளது. முள் மரங்கள் வளர்ந்து புதர் நிறைந்த இந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது.
இந்த முகாமில் கோயில்கள் மற்றும் தனியார் மடங்களில் வளர்க்கப்படும் யானைகள் இடம் பெற உள்ளன. பாகன்கள் தங்குவதற்கு, பாதுகாப்புடன் கூடிய கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
சமையல் கூடம், உணவு சாப்பிடும் கூடம், பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகள், கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
யானைகள் நடைபயிற்சி வழித்தடங்களை, சீர் செய்யும் பணிகளும், யானைகளை குளிக்க வைக்கும் இடத்தில், ஷவர் பாத் அமைக்கப்பட்டு உள்ளன.
இப்பணிகளை, கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில், நான்கு அதிகாரிகள் குழுவினர் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
