மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சிக்னல்: ரவுண்டானாக்கள் அமைத்தும் பலனில்லை
மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சிக்னல்: ரவுண்டானாக்கள் அமைத்தும் பலனில்லை
UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:02 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, மீண்டும் சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, தேர்நிலையம், மரப்பேட்டை, தபால் அலுவலகம் அருகே ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், விசேஷ மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நகரமே ஸ்தம்பித்து விடுகின்றன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சூழலில், ரவுண்டானா அருகே சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்கான முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., நவீன்குமார் தலைமையில் தானியங்கி சிக்னல் நேற்று பயன்பாட்டுக்கு துவங்கப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜினி மற்றும் போலீசார் பங்கேற்றனர். இதில், காந்தி சிலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நெரிசலை தவிர்க்க சிக்னல் இயக்கப்படுகிறது.
வழக்கம் போல ரவுண்டானா இருந்தாலும், போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு பதிலாக இந்த சிக்னல் இயக்கப்படும். மேலும், போலீசார் ஒலி பெருக்கி வசதியுடன் கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கத்துக்கு பின் ரவுண்டானா அமைத்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு, ரோட்டோரத்தில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது, ஆம்னி பஸ்கள் இயக்கம், வணிகவளாகங்களில் ‘பார்க்கிங்’ வசதி இல்லாததே முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, தொலைநோக்குடன் திட்டமிட்ட வேண்டும். அப்போது தான், ரவுண்டானா அமைத்ததன் நோக்கம் பலனளிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
