நெரிசல் தவிர்க்க சிக்னல் அமையுங்க! வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு
நெரிசல் தவிர்க்க சிக்னல் அமையுங்க! வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 25, 2026 08:15 PM

வால்பாறை: வால்பாறை நகரில் நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரம், ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளது. நகரில் கார் பார்க்கிங் வசதியில்லாத நிலையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதே போல் நான்கு ரோடுகள் சந்திக்கும் ஸ்டேன்மோர் சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:
வால்பாறையில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வதால், போஸ்ட் ஆபீஸ், சுப்ரமணிய சுவாமி கோவில் முன்புறம், காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், ஸ்டேன்மோர் சந்திப்பு, புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.
இந்த ரோடுகளில் அதிவேகமாக வரும் வாகனங்களாலும், போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்காமல் இயக்கப்படும் வாகனங்களாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க போக்குவரத்து சிக்னல் அமைக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
