ADDED : பிப் 10, 2024 12:26 AM
கோவை;கோவை அரசு கலை கல்லுாரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸ் சாலையில் நடந்தது. கல்லுாரி மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தெரு நாடகத்தை அரங்கேற்றினர்.
பத்து பேர் சேர்ந்த ஓர் குழுவினர், குழந்தை திருமணத்தின் விளைவுகளை விளக்கும் வகையில், தெரு நாடகத்தை அரங்கேற்றினர்.
எட்டு பேர் சேர்ந்த குழுவினர், மவுன நாடகம் என்ற பெயரில், ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை பாதிப்புகளால் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை உடல் அசைவுகள், முகபாவனைகளை கொண்டு நடித்து அசத்தினர்.
இதில், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு, பின் படித்து பைலட் ஆகும் பெண்ணாக நடித்த பிளஸ்சி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக நடித்த, மாற்றுத்திறனாளி மாணவி தெய்வராணி ஆகியோர், நடிப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
நிகழ்வில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் உலகி, அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் சுகுணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.