/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் பட்டு விவசாயிகள்: வெயில் காலத்தில் தாக்கும் 'பால்புழு நோயும்' ஒரு சவால்
/
வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் பட்டு விவசாயிகள்: வெயில் காலத்தில் தாக்கும் 'பால்புழு நோயும்' ஒரு சவால்
வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் பட்டு விவசாயிகள்: வெயில் காலத்தில் தாக்கும் 'பால்புழு நோயும்' ஒரு சவால்
வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் பட்டு விவசாயிகள்: வெயில் காலத்தில் தாக்கும் 'பால்புழு நோயும்' ஒரு சவால்
ADDED : மார் 26, 2025 10:26 PM

கோவை:
''பட்டு விவசாயத்தை பொறுத்தவரை நஷ்டம் வராது. ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்,'' என்கின்றனர் பட்டு விவசாயிகள்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், உடுமலை பகுதிகளில் அதிக அளவில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பொள்ளாச்சி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில், பட்டுக்கூடு உற்பத்தி தொழில், விவசாயிகளின் முக்கிய தொழிலாக உள்ளது.
படித்த இளைஞர்கள் பலர், பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், பட்டு மனைகள் உருவாக்கவும், உபகரணங்கள் மற்றும் மல்பரி விவசாயத்துக்கு தேவையான உரம் உள்ளிட்டவை வாங்க, மானியத்துடன் கடன் உதவியும் வழங்கி வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை, கோவையில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அங்காடியில் விற்பனை செய்து வருகின்றனர். சிலர் சேலம், ஓசூர், தர்மபுரி, கர்நாடகா ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று, விற்பனை செய்து வருகின்றனர்.
பட்டுக்கூடுகள் சராசரியாக கிலோ, 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு நுாலுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் போது, 700 ரூபாய் வரை விலை கிடைக்கும் என்கிறார், அன்னுாரை சேர்ந்த பட்டு விவசாயி பாலசுப்ரமணியம்.
அவர் கூறியதாவது:
எனக்கு சொந்தமாக, மூன்று ஏக்கர் பூமி உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளாக பட்டு விவசாயம் செய்து வருகிறேன். ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் மல்பெரிக்கு 50 ஆயிரம் புழு வரை வளர்க்க முடியும். இந்த புழுக்கள், சராசரியாக 80 முதல் 90 கிலோ வரை கூடுகளை உற்பத்தி செய்யும். புழுவுக்கு நோய் தொற்று வராமல் பராமரித்தால், இன்னும் லாபம் கிடைக்கும்.
வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் சிரமமாக உள்ளது. இது போன்ற வெயில் காலத்தில் பால்புழு நோய் தாக்கும். அப்போது எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.