ADDED : மார் 31, 2026 04:02 PM

கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், முதல் 10 ஆண்டுகள் ஆளும் பொறுப்பிலும் இருந்திருக்கிறது. ஆனாலும், நீண்ட கால கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. ஆட்சி மாறியபோதும், கோரிக்கைகள் கோரிக்கைகளாகவே நீடித்தன; இம்முறையும் நீடிக்கின்றன.
அப்படி சில கோரிக்கைகள்:
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதியில் விடுபட்ட பகுதிகளை இணைந்து, 2ம் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கீரணநத்தம், அசோகபுரம், குருடம்பாளையம், சோமையம்பாளையம் ஆகிய ஊராட்சிகள், மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகள். இங்கு சேகரிக்கப்படும் குப்பையை வெளியேற்ற போதிய இடவசதி இல்லை. ஆங்காங்கு குவிக்கப்பட்டும், பள்ளம் தோண்டி கொட்டியும் வருவதால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த குப்பை பிரச்னைக்கு தீர்வே இல்லை.
இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
வெள்ளக்கிணறு மற்றும் துடியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், ரயில்வே லெவல் கிராஸிங்கில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 600 பேர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை. கவுண்டம்பாளையத்தில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தை, பள்ளிக்கு கொடுக்க, வடக்கு ஆர்.டி.ஓ., மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. மாற்று இடம் வீரபாண்டி கிராமத்தில் கொடுப்பதாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
இதெல்லாம் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள்தான். வெற்றி பெற்றதும் வசதியாக மறந்துவிட்டு, தேர்தலின்போது மீண்டும் அவர்களே வாக்குறுதி கொடுக்கின்றனர்.
இந்தமுறையும் இதே கோரிக்கைகளுக்கு யாரெல்லாம் உத்தரவாதம் கொடுக்கப்போகிறார்களோ!
