/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.110.80 கோடியில் சிங்கையில் மேம்பாலம்; இன்று டெண்டர் இறுதி செய்ய முடிவு
/
ரூ.110.80 கோடியில் சிங்கையில் மேம்பாலம்; இன்று டெண்டர் இறுதி செய்ய முடிவு
ரூ.110.80 கோடியில் சிங்கையில் மேம்பாலம்; இன்று டெண்டர் இறுதி செய்ய முடிவு
ரூ.110.80 கோடியில் சிங்கையில் மேம்பாலம்; இன்று டெண்டர் இறுதி செய்ய முடிவு
ADDED : அக் 28, 2024 06:12 AM
கோவை ; ரூ.110.80 கோடியில், 54 கண்களுடன், 2,400 மீட்டர் நீளத்துக்கு, சிங்காநல்லுாரில் கட்ட உத்தேசித்துள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்துக்கான டெண்டர், இன்று இறுதி செய்யப்படுகிறது.
கோவை நகர்ப்பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, சிங்காநல்லுார், சாயிபாபா காலனி, சரவணம்பட்டி ஆகிய மூன்று இடங்களில், ரூ.282.21 கோடியில் மேம்பாலங்கள் கட்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்தது.
ஆனால், 'மெட்ரோ ரயில்' இயக்க உத்தேச வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டதால், இம்மூன்று மேம்பாலங்களுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தடையின்மை சான்று வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது.
மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு, பல ஆண்டுகளாகும் என்பதால், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண, மேம்பாலங்கள் கட்ட வேண்டியது அவசியம் என தொழில்துறையினர் வலியுறுத்தினர்.
அதனால், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாயிபாபா காலனி, திருச்சி ரோட்டில் சிங்காநல்லுாரில் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சாயிபாபா காலனியில் ரூ.59.93 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டு, துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்காநல்லுாரில் ரூ.110.80 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது; யாருக்கு டெண்டர் என, இன்று இறுதி செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளிக்கு முன் துவங்கி, சிங்காநல்லுார் சந்திப்பை கடந்து, மேற்கு மின்வாரிய அலுவலகம் முன்பு வரை, 2,400 மீட்டர் நீளத்துக்கு, 54 கண்களுடன் நான்கு வழிச்சாலையாக இப்பாலம் அமையும்.
1.5 மீட்டர் அகலத்துக்கு, மழை நீர் வடிகால் கட்டப்படும்; 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 7 மீட்டராக அணுகுசாலை விஸ்தரிக்கப்படும். இம்முறை டெண்டர் இறுதியாகி விடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது' என்றனர்.