/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்காநல்லுார் மேம்பால பணி மார்ச் 7ல் மறுடெண்டர்
/
சிங்காநல்லுார் மேம்பால பணி மார்ச் 7ல் மறுடெண்டர்
ADDED : பிப் 16, 2024 01:56 AM
கோவை:சிங்காநல்லுாரில் மேம்பாலம் கட்டுவதற்கு, திட்ட மதிப்பீட்டுத் தொகையை காட்டிலும், 35 சதவீதம் அதிகமாக டெண்டர் கோரியதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை நிராகரித்து விட்டது. அதனால், மறுடெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, சிங்காநல்லுார், சாயிபாபா காலனி, சரவணம்பட்டி ஆகிய இடங்களில், ரூ.282.21 கோடியில் மேம்பாலங்கள் கட்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்தது.
சத்தி ரோட்டில் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் இருப்பதால், சரவணம்பட்டியை தவிர்த்து, சாயிபாபா காலனியில் ரூ.59.93 கோடியிலும், சிங்காநல்லுாரில் ரூ.110.80 கோடியிலும் மேம்பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டது. கடந்தாண்டு செப்., மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த டெண்டரில், ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், சிங்காநல்லுாரில் கட்டப்படும் மேம்பாலத்துக்கான திட்ட மதிப்பீட்டில் இருந்து, 35 சதவீதம் அதிகமாக கோரியிருந்ததால், டெண்டரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்து விட்டது. அதனால், மார்ச், 7க்கு மறுடெண்டர் கோரப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களின் தகுதி பரிசீலனை செய்யப்பட்டு, மீண்டும் டில்லிக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதனால், லோக்சபா தேர்தலுக்கு பிறகே சிங்காநல்லுார் மேம்பாலப் பணி துவங்கும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல், சாயிபாபா காலனி மேம்பாலத்துக்கான டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்த நிறுவனங்கள், திட்ட மதிப்பீட்டு தொகையை காட்டிலும் அதிகமாக கோரியுள்ளதால், துறையின் அனுமதிக்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.