/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிரதமர் முன் பாடியது பெரிய வரம்'
/
'பிரதமர் முன் பாடியது பெரிய வரம்'
ADDED : ஜன 18, 2024 01:13 AM

மேட்டுப்பாளையம் : பிரதமர் நரேந்திர மோடி முன் பாடியது பெரிய வரம் என காரமடையை சேர்ந்த பாடகியான பள்ளி மாணவி ஸ்ரீநிதா தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடை அருகே டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி அழகு கோமதி. இவர்களது 2 வது மகள் ஸ்ரீநிதா, 13. காரமடை அருகே உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார். பின் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன் பாடி, அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீநிதா கூறியதாவது:
இசையில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. 4 வயதில் இருந்தே இசை கற்று வருகிறேன். எனது பெற்றோர் இதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். மத்திய இணை அமைச்சர் என்னை அழைத்து பிரதமர்முன் பாடும் வாய்ப்பை பெற்று தந்தார். நான் பிரதமருக்கு பிடித்த சத்யம் சிவம் சுந்தரம் பாடலை பாடினேன். பிரதமர் அதை கேட்டு, அருகில் அழைத்து பாராட்டி அசீர்வதித்தார். பிரதமர் நரேந்திர மோடி முன் பாடியது பெரிய வரம்.
இது எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது போல் உள்ளது. இசை மட்டுமல்ல, நமக்கு பிடித்த துறையில் நாம் பயிற்சி மேற்கொண்டு, முழு முயற்சியில் ஈடுபட்டால், அதில் நாம் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீநிதாவின் அக்காள் ஹர்சிதா, கால்நடை மருத்துவம் படிக்கிறார்.---