/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றிலிருந்து எலும்புக்கூடு மீட்பு: சரணடைந்த இருவரால் பரபரப்பு
/
கிணற்றிலிருந்து எலும்புக்கூடு மீட்பு: சரணடைந்த இருவரால் பரபரப்பு
கிணற்றிலிருந்து எலும்புக்கூடு மீட்பு: சரணடைந்த இருவரால் பரபரப்பு
கிணற்றிலிருந்து எலும்புக்கூடு மீட்பு: சரணடைந்த இருவரால் பரபரப்பு
ADDED : ஆக 09, 2025 01:31 AM
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டியிலிருந்து ஒக்கிலிபாளையம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான குதிரை பண்ணை உள்ளது. இங்கு டேவிட் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன், 48; கோழிப்பண்ணை காவலாளி. இவரது நண்பர் முருகபெருமாள், 25 .
இருவரும் நேற்று முன்தினம், செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று, இரு மாதங்களுக்கு முன் ஜெயராம். 24 என்பவரை மது போதையில் தாக்கி, கிணற்றினுள் கல்லை கட்டி போட்டுவிட்டதாக கூறி சரணடைந்தனர்.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து, இரவு, 11:00 மணிக்கு கிணற்றிலிருந்த நீரை வெளியேற்றும் பணியை துவக்கினர். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் பணி நிறைவடைந்தது.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஆறு பேர், பெட்ஷீட்டால் சுற்றப்பட்டு, நான்கடி நீள கல்லுடன் இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த சடலத்தை மீட்டு, மேலே எடுத்து வந்தனர்.
அதனை பிரித்தபோது எலும்புக் கூடு மட்டும் காணப்பட்டது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர் சங்கர் பிரேத பரிசோதனை செய்த பின், எலும்புக் கூடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கொலையை செய்தது வேறு நபர் என்பதும், இவ்விருவரும் அந்நபருக்காக சரணடைந்ததும் தெரிந்தது. ஆனால் அந்நபர் யார், எதற்காக ஜெயராம், எங்கு கொலை செய்யப்பட்டார் எனும் விபரங்களை இருவரும் கூறவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண் சடலத்தின் கை சூலுார் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில், சுதாகர் என்பவருக்கு சொந்தமான, பேப்பர் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு இரு வளர்ப்பு நாய்கள் உள்ளன. நேற்று முன்தினம் காலை கம்பெனியை ஊழியர்கள் திறந்த போது, ஸ்டோர் ரூம் அருகே ஆண் சடலத்தின் துண்டிக்கப்பட்ட வலது கை மட்டும் கிடந்துள்ளது. இரு விரல்களை நாய்கள் கடித்து குதறிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து சூலுார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீசார், கையை மீட்டனர். சுற்றுவட்டார பகுதிகளில் சடலம் ஏதாவது கிடக்கிறதா என,தேடினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனத்துக்கு அருகில் சென்று மோப்ப நாய் நின்றது. மருத்துவ கழிவுகளுடன் சேர்ந்து கை வந்ததா, அதை நாய்கள் கவ்வி கொண்டு வந்து தொழிற்சாலை வளாகத்தில் போட்டதா, அல்லது யாராவது கொலை செய்து, கையை மட்டும் வீசி சென்றார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.