/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்றலில் பின்தங்கியவர்களுக்கு 'திறன் மாணவர்கள்' பயிற்சி
/
கற்றலில் பின்தங்கியவர்களுக்கு 'திறன் மாணவர்கள்' பயிற்சி
கற்றலில் பின்தங்கியவர்களுக்கு 'திறன் மாணவர்கள்' பயிற்சி
கற்றலில் பின்தங்கியவர்களுக்கு 'திறன் மாணவர்கள்' பயிற்சி
ADDED : ஜூலை 27, 2025 09:06 PM
பொள்ளாச்சி; நடப்பு கல்வியாண்டு, மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை, கற்றலில் பின்தங்கியவர்களுக்கு, 'திறன் மாணவர்கள்' என்ற தலைப்பில் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி பொருட்களை அரசு வழங்கி வருகிறது. அவர்களது கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், திறமைகளை வளர்க்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில்,பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, ஆசிரியர்கள் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறலாம் என்ற நிலை நீடிப்பதால், பலர், அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு முன்னேறியும், எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில்,நடப்பு கல்வியாண்டு, 'திறன் மாணவர்கள்' என்ற தலைப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த, 2023-24ம் கல்வியாண்டில் 'ஸ்லோ லேனர்' என்ற தலைப்பிலும், 2024-25ல் 'போகஸ் லேனர்' என்ற தலைப்பிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு, 'திறன் மாணவர்கள்' என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாரந்தோறும், 4 பாடவேளைகள் பயிற்சி அளிக்க, தனியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என, அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக, ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூறினர்.
இந்த பயிற்சிகளின் வாயிலாக, கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களின் கற்றல் திறன் மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.