அங்கன்வாடிக்குள் நுழைந்த குட்டி யானை விரட்டியடிப்பு
அங்கன்வாடிக்குள் நுழைந்த குட்டி யானை விரட்டியடிப்பு
UPDATED : நவ 26, 2026 07:22 PM
ADDED : நவ 26, 2026 07:22 PM
வால்பாறை: வால்பாறை அருகே, அங்கன்வாடி மையத்துக்குள் நுழைந்த குட்டியானையை, வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறை சுற்றுப்பகுதிகளில், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறை சோலையாறு அணை, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், ரொட்டிக்கடை, முடீஸ், பன்னிமேடு உள்ளிட்ட பகுதிகளில், பகல் மற்றும் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக ரோட்டோரமாக சுற்றுவதை காண முடிகிறது.
இந்நிலையில், வால்பாறை அடுத்த குரங்குமுடி முருகன் எஸ்டேட் பகுதியில், சில நாட்களாக குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு, 8:00 மணிக்கு முருகன் எஸ்டேட் அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து, குட்டி யானை உள்ளே சென்றது.
தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர், பொதுமக்களுடன் சேர்ந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
