ADDED : செப் 20, 2026 05:53 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வெங்காய மொத்த மார்க்கெட்டுக்கு, சின்ன வெங்காயம் வரத்து சரிந்ததால், கிலோ, 105 ரூபாய்க்கு விற்பனையானது.
பொள்ளாச்சி காந்தி மொத்த மார்க்கெட்டுக்கு, பொள்ளாச்சி, உடுமலை, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தும், மைசூரு பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கு, வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. வரத்து சீரானால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது.
வெங்காய மொத்த வியாபாரி வெங்காடச்சலம் கூறியதாவது:
பருவமழை பொய்த்ததால், வெங்காய சாகுபடி குறைந்தது. இதனால், மார்க்கெட்டுக்கு உள்ளூர் வரத்து இல்லை. தற்போது தென்காசியில் இருந்து வரும் சின்ன வெங்காயம் தரம் பிரித்து வழங்கப்படுகிறது. மைசூருவில் இருந்தும் வெங்காய வரத்து குறைந்துள்ளது.
இதனால், மொத்த மார்க்கெட்டில் கிலோ, 80 – 105 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில், 95 – 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
எப்போதும், 15 டன் வரத்து இருக்கும். தற்போது, ஐந்து டன் மட்டுமே வந்தது. இதுவும் உள்ளூர் தேவைகளுக்கே பற்றாக்குறையாக உள்ளது. கேரளாவுக்கு குறைந்தளவு மட்டுமே அனுப்பப்படுகிறது.
கோவை ஆலாந்துறையில் இருந்தும் வரத்து இல்லை. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினார்.
