/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தினால் குண்டாஸ்! அதிகாரிகள் கலந்தாய்வில் எச்சரிக்கை
/
ரேஷன் அரிசி கடத்தினால் குண்டாஸ்! அதிகாரிகள் கலந்தாய்வில் எச்சரிக்கை
ரேஷன் அரிசி கடத்தினால் குண்டாஸ்! அதிகாரிகள் கலந்தாய்வில் எச்சரிக்கை
ரேஷன் அரிசி கடத்தினால் குண்டாஸ்! அதிகாரிகள் கலந்தாய்வில் எச்சரிக்கை
ADDED : ஜன 01, 2025 07:00 AM
பொள்ளாச்சி : 'ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என, இருமாநில அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில், ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை, முறைகேடாக சேகரித்து, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அரிசி கடத்தலுக்கு பிரதான வழித்தடங்கள் மட்டுமின்றி, போலீஸ் செக்போஸ்ட் இல்லாத பகுதிகளை தேர்வு செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், தமிழக - கேரள மாநில எல்லையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில், கலந்தாய்வு கூட்டம் வாளையார் தனியார் ேஹாட்டலில் நடந்தது. கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் பீனா, பாலக்காடு வட்ட வழங்கல் அஜய்குமார் மற்றும் தமிழக - கேரள மாநில குடிமைப்பொருள் அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர். அதில், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடிமைப்பொருள் போலீசார் கூறியதாவது:
கோவை சரகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, கோவை, நீலகிரி ஆகிய அலகுகளில், சிறப்பு சுற்றுக்காவல் பிரிவுகள், சோதனைச்சாவடி போலீசார் அடங்கிய குழுவினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநில எல்லைகளான வாளையார், வேலந்தாவளம், செமணாம்பதி, நடுப்புணி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டனுார், வடக்கு காடு, ஜமீன்காளியாபுரம், உருளிக்கல், ஆனைக்கட்டி, தேனாம்பாளையம், கக்கநள்ளா, நாடுகாணி, தேவாலா, எப்பநாடு, எருமாடு, சோழடி ஆகிய சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாதந்தோறும், எஸ்.பி., தலைமையில் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான புகார்களை, 1800 599 5950 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணுக்கு, 24 மணி நேரமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, கூறினர்.