/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாவது வார்டில் பாம்புகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்
/
ஐந்தாவது வார்டில் பாம்புகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்
ஐந்தாவது வார்டில் பாம்புகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்
ஐந்தாவது வார்டில் பாம்புகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்
ADDED : அக் 29, 2024 05:29 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி ஐந்தாவது வார்டில், ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, பாம்புகள் அடிக்கடி வருவதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. மேலும் இடிந்து உள்ள படித்துறையை கட்டிக் கொடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் ஐந்தாவது வார்டு, பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த வார்டில் பவானி ஆற்றின் கரையோரம் குஞ்சான் தெரு, சொக்கலிங்கம் வீதி, கும்பகோணத்தார் வீதி ஆகிய வீதிகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி மக்கள் கூறியதாவது: மழைக்காலத்தில் பவானி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது, எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
மேலும் பவானி ஆற்றின் கரையோரம் செடிகள், நாணல் தண்டு வளர்ந்து புதர் போல் உள்ளது. இதிலிருந்து பாம்புகள் குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி வருகின்றன. மேலும் சொக்கலிங்கம் வீதியில் நகராட்சியின் சார்பில் கட்டி உள்ள படித்துறை இடிந்துள்ளது. அதை மீண்டும் புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும். மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் சிதிலமடைந்துள்ளது. அதை சீர் செய்து தரவேண்டும். வார்டுகளில் தூய்மைப் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை. இவ்வாறு மக்கள் கூறினர்.
இது குறித்து நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் கூறியதாவது: பவானி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், கரையோரம் உள்ள வீடுகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு தேக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு செல்லாமல் ஆற்றின் கரையோரத்திலேயே குடியிருந்து வருகின்றனர். பவானி ஆற்றின் கரைப்பகுதியில் வளர்ந்துள்ள புல் மற்றும் நாணல் தண்டுகளை பொதுப்பணித்துறையினர் தான் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த வார்டில் மிகவும் பழமை வாய்ந்த சிதிலமடைந்துள்ள விநாயகர் கோவில், புதிதாக கட்ட, 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் கூறினார்.