ADDED : ஜன 20, 2025 11:21 PM
அன்னுார்; அன்னுார் ஒன்றியத்தில், பசூர் ஊராட்சியில், நேற்று சமூக தணிக்கை துவங்கியது. வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வட்டார வள அலுவலர் பேசுகையில், ''அனைவரும் சமூக தணிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார். கூட்டத்தில் ஊராட்சி செயலர் செந்தில்குமார், 100 நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். செய்யப்பட்ட பணிகள் களத்தில் அளவீடு செய்தல், வேலை அட்டைகள் பரிசோதனை செய்யும் பணி வருகிற 22ம் தேதி வரை நடைபெறும். 23ம் தேதி தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படும். 24ம் தேதி பசூரில் காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும்.
இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என, தணிக்கையாளர்கள் தெரிவித்தனர். இதேபோல், காரமடை ஒன்றியத்தில், சிக்கதாசம்பாளையம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வதம்பச்சேரி ஊராட்சிகளில், நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.