/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை துவக்கம்
/
நான்கு ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை துவக்கம்
ADDED : பிப் 25, 2024 10:41 PM
அன்னுார்;அன்னுாரில் நான்கு ஊராட்சிகளில், இன்று சமூக தணிக்கை துவங்குகிறது.
அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இப்பணிகளில், சரியாக சம்பளம் வழங்கப்படுகிறதா, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, என்பது குறித்து வெளி தணிக்கையாளர்கள் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் சமூக தணிக்கைநடக்கிறது. கடந்த 2022 ஏப். 1 முதல், 2023 மார்ச் 31 வரை குப்பனுார், குன்னததுார், காட்டம்பட்டி, குப்பே பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை இன்று துவங்குகிறது.
இன்று முதல் வரும் 29ம் தேதி வரை, தணிக்கையாளர்கள் குழு, வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்கின்றனர்.
வீடு, வீடாகச் சென்று, பயனாளிகளிடம் வங்கி கணக்கு புத்தகத்தை ஆய்வு செய்ய உள்ளனர். நான்கு நாள் ஆய்வுக்குப் பிறகு ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகள், ஆட்சேபனைகள் குறித்து வரும் மார்ச் 1ம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
'பொதுமக்கள், 100 நாள் திட்ட தொழிலாளர்கள், இந்த சிறப்பு கிராம சபையில் பங்கேற்று திட்டம் குறித்து நடைபெற்ற சமூக தணிக்கை அறிக்கையை தெரிந்து கொள்ளலாம்.
திட்டம் குறித்து கேள்வி கேட்கலாம். விவாதிக்கலாம்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

