/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நம் சந்ததிக்காக மண் பாதுகாப்பு அவசியம்'
/
'நம் சந்ததிக்காக மண் பாதுகாப்பு அவசியம்'
ADDED : ஆக 28, 2025 05:41 AM
- நமது நிருபர் -
''நம் சந்ததி நன்றாக இருக்க மண்ணை பாதுகாக்க வேண்டும்'' என்று மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி ஞானகுமார் டேனியல் கூறினார்.
பொங்கலுார், வேலம்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில், 'என் பட்டு - என் பெருமை' என்ற தலைப்பில் செயல் விளக்கக்கூட்டம் நடந்தது.
மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி ஞானகுமார் டேனியல் பேசியதாவது: நம் சந்ததி நன்றாக இருக்க மண்ணை பாதுகாக்க வேண்டும். அதற்கு குப்பையை உரமாக இட வேண்டும்.
மல்பெரி இலை சத்தானது. கழிவுகளை எரித்து சத்தை வீணாக்கக்கூடாது. அவற்றை மக்க வைத்து உரமாக மாற்றினால் வெளியில் உரம் வாங்க வேண்டியதில்லை.
செடிக்கு ஒரு உரத்தை அதிகமாக போட்டால் பிற உரத்தை எடுக்க விடாது. மண் பரிசோதனை செய்து மண்ணுக்கு பொருத்தமான உரமிட வேண்டும். இல்லாவிட்டால் மண் கெடும்.
காரத்தன்மையுள்ள நிலத்திற்கு 'அமோனியம் சல்பேட்', வளமான மண்ணுக்கு யூரியா போடலாம். உரத்தை தண்ணீரில் கரைத்தால் ஆவியாகிவிடும். ஐந்து சதவீதம் கூட செடிக்கு கிடைக்காது.
வேகமாக கரையாமல் இருக்க வேப்பம் புண்ணாக்குடன் கலந்து போட வேண்டும். சத்து இல்லாவிட்டால் புழு, நோய் தாக்கி வளர்ச்சி குறையும். மண்ணில் சத்து அதிகரிக்க தொழு உரம் இடவேண்டும். உரத்தை மண்ணில் போட்டு மூட வேண்டும். களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி தெளிக்கக்கூடாது.
குருத்து புழுக்களை அழிக்க புழு ஒட்டுண்ணி விட்டு கட்டுப்படுத்த வேண்டும். கோழி எரு சூடு அதிகம். அதை மண்ணால் மூடி தண்ணீர் தெளித்து ஆறு மாதம் கழித்து போடலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.