/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் கடத்தல்; கவுசிகா நதியில் கண்காணிப்பு
/
மண் கடத்தல்; கவுசிகா நதியில் கண்காணிப்பு
ADDED : ஆக 20, 2025 12:32 AM
கோவில்பாளையம்; கவுசிகா நதி பள்ளத்தில் மண் கடத்துவது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இரவு பகலாக வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியை துவக்கி உள்ளனர்.
மேற்கே குருடி மலையில் துவங்கி, எஸ். எஸ்.குளம், அன்னூர், சூலூர் ஒன்றியங்கள் வழியாக கவுசிகா நதி செல்கிறது. இந்த நதியில் தற்போது சிலர், கள்ளிப்பாளையம் மற்றும் பச்சாபாளையம் ஊராட்சிகளின் எல்லையில், சில மாதங்களாக, இரவு நேரத்தில் லோடு கணக்கில் மண் எடுத்து கடத்தினர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அன்னூர் தாசில்தார் யமுனா உத்தரவிட்டார். அன்னூர் தெற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்.எஸ்.குளம் வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கள்ளிப்பாளையம், பச்சாபாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் அடங்கிய குழு அப்பகுதியில் நேற்று ஆய்வு செய்தது.
எவ்வளவு ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து மண் கடத்திச் செல்லப்பட்டது என்பதை ஆய்வு செய்தனர்.
பின்னர் வருவாய் துறையினர் கூறுகையில், 'இங்கு மண் கடத்துவது குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிந்தால் வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மண் கடத்துவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.