/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் ரூ . 12 கோடியில் புதிய பாலம் கட்ட மண் ஆய்வு
/
பவானி ஆற்றில் ரூ . 12 கோடியில் புதிய பாலம் கட்ட மண் ஆய்வு
பவானி ஆற்றில் ரூ . 12 கோடியில் புதிய பாலம் கட்ட மண் ஆய்வு
பவானி ஆற்றில் ரூ . 12 கோடியில் புதிய பாலம் கட்ட மண் ஆய்வு
ADDED : நவ 07, 2025 09:17 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே, 12 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்ட, ஆற்றில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தையும், நீலகிரி மாவட்டத்தையும் இணைக்கும் இணைப்பாக, மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டி, 40 ஆண்டுகளுக்கு மேலானதால், பாலத்துக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனால் மற்றொரு புதிய பாலம் கட்ட வேண்டும் என, பயணிகள் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
தற்போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் குறுக்கு, தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் சார்பில், புதிய பாலம் கட்ட, ஆற்றில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. பவானி ஆற்றில் மிதவை பாலம் அமைத்து, அதன் மீது கேலக்ஸி மிஷினை அமைத்து, மண் பரிசோதனை செய்கின்றனர்.
இது குறித்து மண்பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கூறியதாவது: கெட்டியான பாறை வரும் வரை, பூமியை துளையிட்டு செல்வோம். கெட்டியான பாறையில் இருந்து, மேலும் கூடுதலாக மூன்று மீட்டருக்கு துளையிடுவோம். குழாயின் உள்ளே வரும் மண், பாறை ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைப்போம். நிலப்பகுதியில் போர் போட்டதில், ஆறரை மீட்டரில் கெட்டியான பாறை வந்தது. அதன் பிறகு ஐந்தரை மீட்டருக்கு பாறையை துளையிட்டு, அந்த பாறையை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்.
தற்போது ஆற்றில் மூன்று இடங்களில், மண் மற்றும் பாறை மாதிரி பரிசோதனை நடைபெறுகின்றன. ஆற்றில் தண்ணீர் ஒரே அளவாக ஓடிக் கொண்டிருந்தாலோ, அல்லது தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தாலோ பணிகள் பாதிப்பு ஏற்படாது. தண்ணீர் அதிக அளவிலும், குறைவாகவும் வரும்பொழுது, அளவீடுகள் மாறுவதோடு, பணிகளும் பாதிக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் ஒரு வாரத்திற்கு, ஆற்றில் பகலில் தண்ணீர் திறந்து விடாமலும், கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்காமலும் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே, 12 கோடி ரூபாய் செலவில், 120 மீட்டர் நீளத்தில்,10.5 மீட்டர் அகலத்தில், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கும், சாலை மேம்பாட்டிற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பாலம் கட்டும் பணிகள் துவங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

