/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சோலார் நெட்வொர்க்' கட்டணம் ரத்து; ஐகோர்ட் உத்தரவுக்கு 'சிஸ்பா' வரவேற்பு
/
'சோலார் நெட்வொர்க்' கட்டணம் ரத்து; ஐகோர்ட் உத்தரவுக்கு 'சிஸ்பா' வரவேற்பு
'சோலார் நெட்வொர்க்' கட்டணம் ரத்து; ஐகோர்ட் உத்தரவுக்கு 'சிஸ்பா' வரவேற்பு
'சோலார் நெட்வொர்க்' கட்டணம் ரத்து; ஐகோர்ட் உத்தரவுக்கு 'சிஸ்பா' வரவேற்பு
ADDED : ஏப் 01, 2025 06:51 AM

கோவை: தொழில்துறைக்கு மேற்கூரை சோலார் மின்சாரத்துக்கு, நெட்வொர்க் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மின் வினியோகக்கழகம், மேற்கூரை சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும், உயர் அழுத்த மின் நுகர்வோரிடம் இருந்து யூனிட்டுக்கு ரூ.1.04ம், தாழ்வழுத்த மின் நுகர்வோரிடம் இருந்து, ரூ.1.59ம் நெட்வொர்க் கட்டணமாக வசூலிக்கிறது.
இதை ஆட்சேபித்து, சிஸ்பா சார்பில், கடந்த ஆக., 2022ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை, சிஸ்பா உறுப்பினர்களிடம் நெட்வொர்க் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என, நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
தொடர்ந்து வசூல்
ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோர்ட் உத்தரவுக்குக் கீழ்படியாமல், சோலார் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து, நெட்வொர்க் கட்டணத்தை வசூலிக்கிறது.
2008 முதல் 2013 வரை, தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது, அந்தந்த ஆலைகளில் டீசல் ஜெனரேட்டர்களை நிறுவி, மின் உற்பத்தி செய்ய, மின்வாரியம் அறிவுறுத்தியது. அச்சமயத்தில், ஆற்றல் கிரிட் உதவியின்றி மின்சாரம் நேரடியாக, தொழிற்சாலைக்கு அளிக்கப்பட்டது.
அதேபோன்றுதான் சோலார் மின்சாரம், கணிசமான இழப்பு அல்லது ஆற்றல் கிரிட் இல்லாமல், நேரடியாக தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது. மேற்கூரை சோலாரில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, சொந்த உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம்.
தமிழக அரசின் ஆலோசனையின்படி, பலகோடி ரூபாய் முதலீட்டில் சோலார் மின்சாரம் நிறுவப்பட்டது. இதற்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என, சிஸ்பா வாதிட்டது.
வந்தது தீர்ப்பு
கடந்தாண்டு டிச., 22ம் தேதி, எங்களது கோரிக்கையை ஏற்று, ரிட் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தீர்ப்பின் நகல் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணத்தை ரத்து செய்துள்ள இந்த தீர்ப்பால், தமிழகத்தில் மேற்கூரை சோலார் வாயிலாக தொழில் செய்யும் அனைத்து தொழில்களும், நல்ல முறையில் செயல்பட முடியும்.
இத்தீர்ப்பு, தமிழக அரசின் பசுமை மின்சாரத்தை ஊக்குவிக்கும் கொள்கையோடு, கைகோத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இத்தீர்ப்பைப் பின்பற்றி, மேற்கூரை சோலார் மின்சாரத்துக்கு, நெட்வொர்க் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு, முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.