/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காது, மூக்கு, தொண்டை பிரச்னைக்கு தீர்வு
/
காது, மூக்கு, தொண்டை பிரச்னைக்கு தீர்வு
ADDED : நவ 02, 2024 11:22 PM

வட கிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். சிறியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உள்ள காரணத்தால் சில நாட்களில் குணமடைந்து விடுகின்றனர்.
வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைந்து முதியவர்கள் மழை காலங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முதியவர்கள் மழை காலங்களில் ஏற்படும் பிரச்னையில் இருந்து தப்பிக்கவும், காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்னைக்கும் சில தீர்வும் கூறுகிறார் அரசு கிராமியம் ஆயுர்வேத மருந்தகம் டாக்டர் மேகலை.
ஆயுர்வேத மருத்துவம், 8 பிரிவுகளை கொண்டது. அதில் ஒன்று ஷாலக்ய தஞ்ரம். காது, மூக்கு, தொண்டை மருத்துவம் சம்பந்தமானது. இதில் மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு, தும்மல், சளி, இருமல் போன்றவை கபதோஷ, பிரகோபம். அதாவது கப தோஷம் அதிகரிப்பதால் வரும் நோய்கள் ஆகும். சாதாரணமாக இதயத்திற்கு மேல் உள்ள பகுதி கபத்தின் இருப்பிடம் என்றும், இதயத்திற்கு, தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதி பித்தத்தின் இருப்பிடம் என்றும், தொப்புளுக்கும் கீழே உள்ள பகுதி வாத தோஷத்தில் இருப்பிடம் என்றும் ஆயுர்வேதத்தில் கூறுவர்.
மழைக்காலம் துவங்கி விட்டதால் குளிர்ந்த காற்று தலையில் இறங்கும். மேலும் காதின் வழியாக செல்லும். இதனால் சைனசைட்டிஸ் போன்ற நோய்கள் பெரும்பாலும் காணப்படும். மழைக்காலத்தில் தலைபாரம், சளி, மூக்கடைப்பு, தும்மல் போன்ற கபதோஷம் அதிகம் உள்ள வியாதிகள் தோன்றும். இவற்றில் இருந்து தப்பிக்க நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும், நீரில் சீரகம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மழைக்காலத்தில் ஏற்படும் ஜீரண குறைபாட்டை சரி செய்யலாம். உணவில் தயிரை தவிர்க்க வேண்டும்.
அதேபோல சிறிதாக இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள், நொச்சி, துளசி, புதினா, கற்பூரவள்ளி போன்றவற்றை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்க விட்ட தண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கவும். இது தலைவலையில் அதிகப்படியான கபத்தை வெளியேற்றும், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல் குறையும். சுக்கு, மிளகு, திப்பிலி, இவற்றை சரிசமமாக எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் 'டான்ஸிலைட்டிஸ்' தொண்டை கரகரப்பு, சளி, இருமல், நீங்கும்.
தொண்டை வலி போக்க ஏலக்காயை வாயில் வைத்துக் கொண்டால் வலி குணமாகும். ராஸ்னாதி லேப சூரணம் தலை பாரத்தை போக்கும். உச்சி பொடியை குளித்து வந்தவுடன் தலையின் உச்சியில் வைத்து தேய்த்து கொண்டால் தலையில் நீர் இறங்காது. முதியவர்கள் மட்டுமின்றி இதனை அனைவரும் பின்பற்றலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.