ADDED : ஜன 28, 2024 11:24 PM

மேட்டுப்பாளையம்:குளிர்காலத்தை முன்னிட்டு, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு, சொட்டர் மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காரமடை அடுத்த கன்னார்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில், ஸ்ரீபுளூ மெட்டல் நிறுவனத்தின் சார்பாக, கர்ப்பிணி பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் சொட்டர் மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சொட்டர் மற்றும் சத்தான உணவுப் பொருட்களை வழங்கி பேசுகையில், ''காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமை, சிகிச்சைக்கு வரும், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், நிறுவனத்தின் சார்பில் மதியம் சத்தான உணவு வழங்கப்படுகிறது.
மேலும் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு, ஒவ்வொரு மாதம் முட்டைகள், பேரிச்சம்பழம், புரோட்டின் பவுடர், கடலை மிட்டாய், சோப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
தற்போது குளிர் காலம் என்பதால், அவர்களுக்கு சொட்டர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், காரமடை ரோட்டரி சங்க பட்டய தலைவர் சிவ சதீஷ், காரமடை தலைவர் விஜய் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.