/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களுக்கான கருத்தடை மையம்.. புறநகருக்கு எப்போது? பெரும் தொல்லையாக மாறும் அவலம்
/
தெரு நாய்களுக்கான கருத்தடை மையம்.. புறநகருக்கு எப்போது? பெரும் தொல்லையாக மாறும் அவலம்
தெரு நாய்களுக்கான கருத்தடை மையம்.. புறநகருக்கு எப்போது? பெரும் தொல்லையாக மாறும் அவலம்
தெரு நாய்களுக்கான கருத்தடை மையம்.. புறநகருக்கு எப்போது? பெரும் தொல்லையாக மாறும் அவலம்
ADDED : ஜன 20, 2025 11:20 PM

பெ.நா.பாளையம்; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் உள்ளது. ஆனால், கோவை புறநகர் வடக்கு பகுதியில் அந்த வசதிகள் இல்லாததால், தெரு நாய்கள் அதிகளவில் பெருகி பெரும் தொல்லையாக மாறி வருகிறது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெரு நாய்களை பிடிக்க, மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் ஐந்து வாகனங்கள் உள்ளன. தற்போது, மேலும் மூன்று வாகனங்கள் களம் இறக்கப்பட உள்ளன. இந்த வாகனங்களில் நாய்களைப் பிடித்து கொண்டு செல்ல தனியாக கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
வாகனங்களில் பிடிக்கப்படும் நாய்கள், கருத்தடை ஆபரேஷன் செய்து முடித்த பின்னர், அவை இருந்த பழைய இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, விடுவிக்கப்படுகிறது. இதனால் நாய்களின் எண்ணிக்கை மாநகராட்சி பகுதியில் குறைக்க முடியும். ஆனால், கோவை புறநகர் பகுதிகளில் பெருகிவரும் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த, எவ்வித நடவடிக்கையும், உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் எடுக்கப்படுவதில்லை.
கோவை புறநகரில் நாளுக்கு நாள் தெரு நாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு, 10:00 மணிக்கு மேல் நிம்மதியாக வாகனங்களில் பயணம் செய்ய முடியவில்லை. தெரு நாய்கள் துரத்துவதும், அதனால் இரு சக்கர வாகனங்களில் இருந்து விழுந்து, காயம் அடைவதும், அதிகரித்து வருகின்றன.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டில் வீரபாண்டி, தாளியூர், ஜம்புகண்டி, மத்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் இப்பகுதியில் உள்ள பிற தனியார் மருத்துவமனைகளில், 150க்கும் மேற்பட்டோர் நாய் கடிகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர, இருசக்கர வாகனங்களை தெரு நாய்கள் துரத்தியதால், கீழே விழுந்து காயம் அடைந்தவர்கள் ஏராளம்.
குறிப்பாக, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் தெரு நாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இம்மூன்று பேரூராட்சிகளை சேர்ந்த சுகாதார துறை ஊழியர்கள், தெரு நாய்களை பிடித்து, தங்களது பேரூராட்சி எல்லையை தாண்டி கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். ஆனால், சில நாட்களில் மீண்டும் அவை அதே தெருவுக்கு ஓடி வந்து விடுகின்றன. பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, துடியலூர், கூடலூர் நகராட்சி, சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தெரு நாய் கருத்தடை மையத்தை துடியலூர் அல்லது பெரியநாயக்கன்பாளையத்தில் நிறுவ வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் தெரு நாய்களுக்கான கருத்தடைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும் அல்லது தற்காலிக தெரு நாய் கருத்தடை மையங்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்க வேண்டும்.' என்றனர்.