/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு சிறப்பு முகாம்
ADDED : நவ 17, 2025 01:01 AM

- நிருபர் குழு -: பொள்ளாச்சி, வருவாய் கோட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கான சிறப்பு முகாம் நடந்த நிலையில், படிவங்களை எடுத்து வந்த வாக்காளர்கள், பூர்த்தி செய்து கொடுத்தனர்.
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, படிவங்களை வழங்கி வருகின்றனர்.
வீட்டில் உள்ள வாக்காளருக்கு, தலா இரண்டு படிவங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்காமல் மக்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும், படிவம் பூர்த்தி செய்வது தொடர்பாக தெளிவான விளக்கம் இல்லாததால், வாக்காளர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக, படிவம் பூர்த்தி செய்வது, பழைய 2002 வாக்காளர் பட்டியலை பார்வையிடும் வசதியுடன், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், இரு தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், வாக்காளர்கள் உதவிக்காக, கட்சிகளை சேர்ந்த ஏஜன்டுகளும், தன்னார்வலர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்படி, வாக்காளர்கள் பலர், தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்களை எடுத்து வந்து, பதிவு செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கினர்.
வால்பாறை வால்பாறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக இரண்டு நாள் முகாம் நடந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4ம் தேதி முதல் நடக்கிறது. வால்பாறை மலைப்பகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம் வினியோகித்து வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்ப பெறும் பணியும் தற்போது நடக்கிறது.
இந்நிலையில், வால்பாறையில் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் வசதிக்காக சிறப்பு தீவிர திருத்தும் பணிக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
வால்பாறையில் மொத்தம் உள்ள, 68 ஓட்டுச்சாவடிகளிலும் இந்த பணி நடந்தது. முன் அறிவிப்பின்றி முகாம்கள் நடந்ததால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே வாக்காளர்கள் கலந்து கொண்டனர். முகாம் நடைபெறும் பகுதிகளை தாசில்தார் அருள்முருகன், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

