/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை புறநகரில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
/
கோவை புறநகரில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
ADDED : டிச 25, 2024 10:18 PM

-நிருபர் குழு-
கோவை புறநகரில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கருமத்தம்பட்டி-
சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி சுற்றுவட்டார சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சூலூர் சி.எஸ்.ஐ., சர்ச், கருமத்தம்பட்டி புனித மரியன்னை சர்ச், காமாட்சி புரம் உள்ளிட்ட சர்ச்சுகளில் நேற்று முன் தினம் இரவு கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி, சிறப்பு பிராத்தனை நடந்தது.
ஏராளாமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தியும், பாடல்களை பாடியும் ஏசு பிரானை பிரார்த்தித்தனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஏசு பிரான் குறித்த பாடல்களை பாடினர். ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர். நேற்று காலையிலும் பல சர்ச்சுகளில் பிரார்த்தனை நடந்தது. சூலூர் சி.எஸ்.ஐ., சர்ச்சில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க.,மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் மன்னவன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிறிஸ்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அன்னூர்
அன்னூர் வட்டாரத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கும், பின்னர் 9:00 மணிக்கும் சிறப்பு ஆராதனை நடந்தது. ஆலய ஆயர் சாந்தகுமார் சிறப்பு செய்தி அளித்தார்.
ஆலய செயலாளர் பிரேம் தேவா வாழ்த்துச் செய்தி வாசித்தார். பொருளாளர் லிவிங்ஸ்டன் பால், கமிட்டி உறுப்பினர்கள் தினகரன், சுமித், லெசிதா, ஜூலியட் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் தேநீர் மற்றும் கேக் வழங்கப்பட்டது.
இதேபோல், சத்தி ரோட்டில் உள்ள விசுவாச ஜெப ஆலயம், சொக்கம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், குன்னத்தூர் பகுதியில் உள்ள தேவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.
திரளான கிறிஸ்துவ மக்கள் புத்தாடைகள் அணிந்து பங்கேற்றனர். கேக்குகளை பரிமாறிக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் ஆர்.சி., ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, 24ம் தேதி இரவு, 11:30 மணிக்கு சிறப்பு திருப்பலி துவங்கியது. முன்னதாக குழந்தை இயேசு பிறப்பு குறித்து, மறைக்கல்வி மாணவ, மாணவியரின் நாடகம் நடந்தது. இதை அடுத்து, 12:00 மணிக்கு, குழந்தை இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில், பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், குழந்தை இயேசு சுரூபத்தை எடுத்துச் சென்று குடிலில் வைத்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது.
முடிவில் குடிலில் உள்ள குழந்தை இயேசுவை ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். மேட்டுப்பாளையம் நகரில் உள்ள யோவான் சி.எஸ்.ஐ., ஆலயத்தில், 25ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் -காரமடை சாலை சிவன்புரத்தில், அற்புத கெபி ஆரோக்கிய அன்னை என்னும் வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நள்ளிரவு,12:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.