ADDED : நவ 26, 2026 07:42 PM
அன்னூர்: சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு சார்பில், சொந்த வீடு இல்லாத மற்றும் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் தலா 5 லட்சம் ரூபாயில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் அன்னூர் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகளில் நேற்று (நவ.,25) நடந்தது.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறுகையில்,
'சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு வீடு வீடாக தகவல் தெரிவிக்கவில்லை. ஒலிபெருக்கியிலும் அறிவிக்கவில்லை. முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கூட தகவல் தெரியவில்லை.
இதனால் உண்மையிலேயே வீடு இல்லாத மற்றும் குடிசை வீடுகளில் வசிப்போர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே இந்த திட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பு பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் வீடு பெற தகுதி உள்ளவர்கள். எனினும் மீண்டும் ஒருமுறை திட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது,' என்றனர்.
