/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
10 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : டிச 04, 2024 10:18 PM
கோவில்பாளையம்; கோவை மாவட்டத்தில், குப்பேபாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், நாளை (6ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2022 வரை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும், பத்து ஊராட்சிகளில் நடக்கிறது.
நடப்பு வாரத்தில், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், வெள்ளமடை ஊராட்சியில் கடந்த மூன்று நாட்களாக சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.
அன்னூர் ஒன்றியத்தில், குப்பேபாளையம் ஊராட்சியில், வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் சமூக தணிக்கை நடந்தது.
சூலூர் ஒன்றியத்தில், நீலம்பூர், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பாப்பம்பட்டி, மதுக்கரை ஒன்றியத்தில் நாச்சி பாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், நாளை காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.