/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவக்கம்: களம் இறங்கினர் பணியாளர்கள்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவக்கம்: களம் இறங்கினர் பணியாளர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவக்கம்: களம் இறங்கினர் பணியாளர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவக்கம்: களம் இறங்கினர் பணியாளர்கள்
ADDED : நவ 04, 2025 09:06 PM

சூலுார்: தேர்தல் கமிஷன் உத்தரவின் படி, சூலுார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நேற்று துவங்கின.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
முன்னதாக, சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தீவிர திருத்த பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் நேற்று முதல் களத்தில் இறங்கி திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று தீவிர திருத்தத்துக்கான படிவங்களை வழங்கி வருகின்றனர். சூலுார் தொகுதி உள்ளிட்ட புறநகர் தொகுதிகளில், ஆயிரக்கணக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சூலுார் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், பணிகளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 1951 முதல், 2004 வரை மொத்தம், எட்டு முறை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக, 2002-04 ஆண்டில் தீவிர திருத்தப் பணிகள் நடந்தன. அதன்பிறகு தற்போது தீவிர திருத்த பணிகள் துவங்கியுள்ளன.
இறந்த வாக்காளர்கள் பெயர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் பெயர்கள் பட்டியலில் இருப்பது, இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர்களை களைவதற்காக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஒரு ஓட்டு சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். சூலுார் தொகுதியில், 333 ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வை செய்வர்.
வீடு தேடி சென்று படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி, அதை பூர்த்தி செய்து திரும்ப பெறுவர். பூர்த்தி செய்யப்பட்ட இரு படிவங்களில், ஒன்றை வாக்காளர்கள் ஒப்புகை சீட்டாக வைத்துக்கொண்டு, மற்றொன்றை பி.எல்.ஓ., விடம் வழங்க வேண்டும்.
டிச., 4 ம்தேதி வரை இப்பணி நடக்கும். டிச., 9 ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், ஜன., 8 ம்தேதி வரை பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஜன., 31 ம்தேதி வரை சரிபார்ப்பு பணிகள் நடக்கும். பிப்., 7 ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அன்னுார் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 117 ஓட்டு சாவடி நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் துணை தாசில்தார் ஆகாஷ் குமார் படிவங்களை வழங்கினார். இதுகுறித்து வாக்காளர்கள் கூறுகையில், 'வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு சமீபத்திய புகைப்படம் வேண்டும் என அலுவலர்கள் கேட்கின்றனர்.
ஒரு வீட்டில் மூன்று வாக்காளர்கள் இருந்தால் மூன்று பேருக்கும் தனித்தனியாக புகைப்படம் எடுக்க மொத்தம் 300 ரூபாய் செலவாகிறது. தேர்தல் ஆணையமே படிவம் வழங்கும்போது போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கென நிதி ஒதுக்கி போட்டோ எடுக்க வேண்டும். எங்களுக்கு இது கூடுதல் செலவாக உள்ளது,' என புலம்பினர்.

