/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடி வதங்கும் தக்காளி செடிகள்; விவசாயிகள் சோகம்
/
வாடி வதங்கும் தக்காளி செடிகள்; விவசாயிகள் சோகம்
ADDED : நவ 04, 2025 09:06 PM
மேட்டுப்பாளையம்: வெயிலால் தக்காளி செடிகள் வாடி, வதங்கி வருகிறது. தக்காளி மகசூலும் குறைந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சுண்டகரை, திம்மம்பாளையம், கணுவாய்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தென்னை, பாக்கு, வாழைக்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் இங்கு அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தக்காளி செடிகள் வாடி, வதங்கி வருகின்றன. சில இடங்களில் தக்காளி செடிகள் பட்டுப்போய் விடுகின்றன. வெயிலால் தக்காளி மகசூல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவில் பனியின் தாக்கமும் உள்ளது. இதனால் தக்காளி செடிகள் வாடி வதங்கி வருகிறது. தக்காளிகள் பெரிதாவது இல்லை, கலரும் வருவது இல்லை.
தக்காளி செடிகளில் பூ பிடிப்பது குறைந்துள்ளது. பூக்கள் உதிர்ந்து தக்காளி மகசூல் குறைந்துள்ளது. மூங்கில் கம்பு, கயிறு என தக்காளி செடிகளை பாதுகாக்க ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது. அதற்கு ஏற்ற வருவாய் கிடைப்பது இல்லை. இதே நிலை நீடித்தால் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.-----

