/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் மகாமுனிக்கு சிறப்பு பூஜை
/
மாசாணியம்மன் கோவிலில் மகாமுனிக்கு சிறப்பு பூஜை
ADDED : பிப் 27, 2024 11:17 PM

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மகாமுனி பூஜை நேற்றுமுன்தினம் நடந்தது.
பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடந்த, 22ம் தேதி மயான பூஜையும், 23ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகா பூஜையும் நடந்தது. 24ம் தேதி குண்டம் கட்டுதல், சித்திர தேர் வடம் பிடித்தல் நடந்தது. 25ம் தேதி குண்டம் திருவிழாவும், நேற்றுமுன்தினம் காலை கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், இரவு 8:00 மணிக்கு மகாமுனிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
மகாமுனி அருளாளி சுப்ரமணியை, வாண வேடிக்கையுடன் தலைமை முறைதாரர் மனோகர், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண் மற்றும் முறைதாரர்கள், அருளாளிகள் அழைத்தனர். மகாமுனி அருளாளியை, சேலையால் கட்டி கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
அதன்பின், மகாமுனிக்கு, புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண்கலயத்தில் தண்ணீர், பழம் போன்றவை படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகாமுனி அருளாளி, படையல் சாப்பாட்டை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி வலம் வந்தார்.
மகாமுனி படையல் சோறு கிடைத்த பெண் பக்தர்கள், பக்தி பரவசத்தில் மாசாணி தாயே... என கோஷமிட்டனர்.
சிறப்பு பூஜையில், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று மகா அபிேஷகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் திருவிழா நிறைவடைந்தது.

