/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
/
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : ஜன 02, 2025 05:44 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஆராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, 12:00 மணிக்கு பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில், புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முடிவில் அன்பிய மக்களுக்கு, பங்கு பாதிரியார் சிறப்பு ஆசி வழங்கினார்.
அதே போன்று வெல்ஸ்புரத்தில் உள்ள சகாய மாதா ஆலயத்தில், பாதிரியார் லூர்துசாமி தலைமையிலும், வேடர்காலனியில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் பாதிரியார் வின்சென்ட் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இந்த திருப்பலிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஊட்டி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தூய யோவான் ஆலயத்தில், புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இரவு,11:00 மணிக்கு ஆராதனையும் அதைத் தொடர்ந்து, அதிகாலை, 3:00 மணி வரை சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. ரெவரன்ட் பால் மார்ட்டின், உதவி ரெவரென்ட் தீனதயாள் ஆகியோர் வழிபாடுகளை நிறைவேற்றினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று கூட்டு பிராத்தனை நடத்தினர்.
அன்னூர்
அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சிறப்பு ஆராதனை துவங்கியது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு முடிவடைந்தது. ஆயர் சாந்தகுமார் சிறப்பு செய்தி அளித்தார். இதையடுத்து காலை 9:30 மணிக்கு இரண்டாவது சிறப்பு ஆராதனை நடந்தது.
முடிவில் சபை மக்களுக்கு கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இதில் ஆலய கமிட்டி செயலாளர் பிரேம் தேவா, பொருளாளர் லிவிங்ஸ்டன் பால், உறுப்பினர்கள் தினகரன், ஸ்மித், சந்துரு உள்பட பலர் பங்கேற்றனர்.
உப்பு தோட்டம், அல்லிகுளம் பிரிவு, பிள்ளையப்பம்பாளையம், கெம்ப நாயக்கன்பாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட இடங்களில், தேவாலயங்கள் மின்விளக்குகளாலும் வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துவ மக்கள் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.