/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றின் கரையில் கன்னிமார் சிறப்பு பூஜை
/
பவானி ஆற்றின் கரையில் கன்னிமார் சிறப்பு பூஜை
ADDED : ஆக 03, 2025 09:26 PM

மேட்டுப்பாளையம்; ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்று படித்துறையில், முன்னோர்களுக்கு படையல் படைத்து, கன்னிமார் பூஜை செய்தனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆறு ஓடுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி அம்மன் சுவாமியை வழிபடுவது வழக்கம். நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பவானி ஆற்றில், புனித நீராடி அம்மன் சுவாமியை வழிபட்டனர்.
திருமணம் ஆகி மூன்று மாதமான புதுமணத் தம்பதிகள், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவில் அருகே, தாலி சரடை மாற்றி, விநாயகரை வழிபட்டனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள படித்துறையில், இறந்த கன்னி பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை படையல் படைத்து வழிபட்டனர்.
ஏழு கற்களை வைத்து அதற்கு, விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை பூசி, பூமாலை போட்டு, உணவுப் பொருட்கள், துணிகளை படையல் இட்டு கன்னிமார் பூஜை செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
பெ.நா.பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், பெரியநாயக்கன்பாளையம் சந்தை கடை மைதானம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி பெருக்கு விழாவையொட்டி சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டிருந்தது.
சூலூர் ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள அரசூர் மாரியம்மன் கோவில், சூலூர் குடலுருவி மாரியம்மன், மேற்கு அங்காளம்மன், ரங்கநாத புரம் தங்க முத்து மாரியம்மன், குரும்பாளையம் வீரமாட்சி அம்மன் மற்றும் கன்னிமார் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பெண்களுக்கு மாங்கல்ய சரடு, வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன.