/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் வரி விதிப்பு சிறப்பு முகாம்
/
மேட்டுப்பாளையத்தில் வரி விதிப்பு சிறப்பு முகாம்
ADDED : ஜன 28, 2025 11:29 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சியில், புதிய சொத்து வரி விதிப்பு, பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு பெறுதல், புதிய தொழில் வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு (29,30,31) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் ஆகியோர் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள், காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நகராட்சியின் சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் புதிய சொத்து வரி விதிப்பு பெற, காலியிட வரி ரசீது, சொத்து ஆவணம், கட்டட உரிமம், வில்லங்கச் சான்று ஆகியவை கொண்டு வர வேண்டும். பெயர் மாற்றம் செய்ய, நடப்பாண்டு சொத்து வரி ரசீது, குடிநீர் கட்டண ரசீது, வில்லங்கச் சான்று, கட்டடத்தின் புகைப்படம் ஆகியவை கொண்டு வர வேண்டும்.
புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு, சொத்து வரி ரசீதும், புதிய தொழில் வரி விதிப்பு பெற, சொத்து வரி ரசீது, நிரந்தர கணக்கு எண் அட்டை நகல் (பான் கார்டு), ஆதார் அட்டை ஆகியவை கொண்டு வர வேண்டும். புதிய தொழில் உரிமம் பெறுவதற்கும், மற்றும் புதுப்பிக்க, தொழில் வரி ரசீது, சொத்து வரி ரசீது, ஜி.எஸ்.டி., அல்லது நிரந்தர கணக்கு எண் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மேற்கண்ட சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த நாளே ஆணைகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.

