/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் மகாமுனிக்கு சிறப்பு வழிபாடு
/
மாசாணியம்மன் கோவிலில் மகாமுனிக்கு சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 16, 2025 10:40 PM

பொள்ளாச்சி,; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த மகாமுனி பூஜையில், குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் கண்ணீருடன் வழிபட்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மயான பூஜை, சக்தி கும்ப ஸ்தாபனம், மகாபூஜை, சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா, குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
கடந்த, 14ம் தேதி காலை, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 15ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கொடி இறக்குதல் நடைபெற்றது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதல் மகாமுனி பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன. மகா முனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அருள் வந்த நிலையில், வீட்டில் இருந்த மகாமுனி அருளாளி சுப்ரமணியை மேள தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண், முறைதாரர்கள் உள்ளிட்டோர் அழைத்தனர்.
அருள் வந்த நிலையில் ஆக்ரோஷமாக இருந்த அருளாளியை சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். இரவு 9:00 மணிக்கு மகாமுனிக்கு புளி, தயிர் மற்றும் எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மேலும், மகாமுனி அருளாளி, அருள் வந்து படையல்களை சாப்பிட்டவாறு, கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில், மகாமுனியின் பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், திருமணமாகி குழந்தைபேறு கிடைக்காத பல பெண்கள் மகாமுனியின் பிரசாதத்துக்காக காத்திருந்தனர். பிரசாதம் கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீருடன் மகாமுனியை வணங்கினர்.
மகாமுனி பூஜையை காண அதிகப்படியான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெற்றது.

