/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 20, 2025 11:49 PM

கோவை, : புரட்டாசி முதல் சனி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பெரிய கடை வீதியில் உள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்களில் நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
19 வகையான வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்ய, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோவை கொடிசியா அருகில் உள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் சுவாமிக்கு, சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் ஸ்ரீ வாமன பெருமாள் கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சியளித்தார். பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சியளித்தார்.
ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில், ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சித்தாபுதுார் ஜெகன்நாத பெருமாள், சலீவன் வீதி வேணுகோபால சுவாமி, கோட்டைமேட்டில் உள்ள கரிவரதராஜ பெருமாள், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள தசாவதார பெருமாள், கோவைப்புதுாரில் உள்ள பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொண்டாமுத்துார் தொண்டாமுத்துார் அரங்கநாதர் கோயிலில், நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு, அரங்கநாத பெருமாள் வீதி உலா நடந்தது.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுண்டபாளையம் வரதராஜ பெருமாள் கோயில், கொங்கு திருப்பதி கோயில் என, அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
அன்னுார் கோவில் அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோயிலில், அதிகாலை 4.30 மணிக்கு அபிஷேக பூஜை, காலை 5.30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். தாசர்களுக்கு, பக்தர்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை படைத்து வழிபட்டனர். கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பிய படி, பெருமாளை வணங்கினர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார். வரதையம்பாளையம், காட்டம்பட்டி, குன்னத்துார், கஞ்சப்பள்ளி, பொகலுார், பொங்கலுார் ஆகிய ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
காரமடை அரங்கநாதர் கோயிலில்
புரட்டாசி சனிக்கிழமை விழா
காரமடை அரங்கநாதர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தி ல் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். தாசர்களுக்கு காய்கறி, அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை பக்தர்கள் வழங்கினர். தாசர்கள் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் சிறிதளவு கொடுத்தனர். அதைப் பெற்ற பக்தர்கள், வீட்டில் பொங்கல் வைத்து விரதத்தை முடித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி, அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.