ADDED : ஏப் 15, 2026 04:55 PM
பெ.நா.பாளையம்: தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த தெளிப்பான் வாடகைக்கு உள்ளதாக, வேளாண் பொறியியல் துறை அறிவித்துள்ளது.
தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, வேளாண் பொறியியல் துறையில் உள்ள இந்த இயந்திரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை கலந்து தண்ணீரை அடித்து தென்னை மரங்களை காப்பாற்றலாம். ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக, 500 லிட்டர் தண்ணீரையோ, மருந்து கலவையோ, 35 முதல் 45 தென்னை மரங்களின் தென்னங்கீற்றுக்களின் அடிபரப்பில் பீய்ச்சி அடிக்கலாம்.
இயந்திரங்களை, உழவர் செயலி, இ-வாடகை வாயிலாக தங்கள் இருப்பிடத்திலிருந்து விவசாயிகள் முன்பதிவு செய்யலாம். ஒரு மணி நேரத்துக்கு வாடகையாக, 450 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, வேளாண் பொறியியல் துறை அறிவித்துள்ளது.
