/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறக்க, சிறகு விரிக்க... 'அகம்' திறக்கும் புத்தகம்
/
சிறக்க, சிறகு விரிக்க... 'அகம்' திறக்கும் புத்தகம்
சிறக்க, சிறகு விரிக்க... 'அகம்' திறக்கும் புத்தகம்
சிறக்க, சிறகு விரிக்க... 'அகம்' திறக்கும் புத்தகம்
ADDED : நவ 23, 2024 11:28 PM

சமீபத்தில், அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த சுட்டு விரல், ஒரு இயக்குனரின் பேட்டியை பார்த்ததும், அதை சட்டென்று நிறுத்தி பார்க்க வைத்தது. அந்த இயக்குனர் சொன்ன விஷயம் அப்படியொரு நெகிழ்ச்சி. 'இரவில் பயணித்துக் கொண்டிருக்கிறது ஒரு பஸ். ஒலித்துக் கொண்டிருக்கிறது இளையராஜாவின் பாடல். பயணிகள் துாங்கச் செய்கிறது ஒரு பாட்டு; அதே பாட்டு, ஓட்டுனரை விழித்திருக்க செய்கிறது' என்ற அவர் சொன்னவுடன், எப்படி இப்படி ஒரு ஆச்சரியம் நிகழ்கிறது என்று வியக்க வைத்தது.
அப்படித் தான் சில புத்தகங்களும். சில புத்தகங்கள் துாக்கம் வரவழைக்கும். சில புத்தகங்கள், துாக்கத்தை தள்ளி வைக்கும். அப்படியான ஒரு புத்தகம் தான், உளவியல் நிபுணரான ஸ்ரீதேவி அரவிந்தனின், 'அம்மா நான் நலமா?'
குழந்தைகள் வளர்ப்பு குறித்த உளவியல் நுால் அது. விஜயா பதிப்பகத்தின் வெளியீடு.
'குழந்தைகளை வளர்ப்பது, இப்போதைக்கு பெரிய 'டாஸ்க்' ஆகி விட்டது. மொபைல் போன், 'டிவி' போன்ற மீடியாக்களால் அனைத்து தகவல்களும் ஊட்டப்பட்ட நம் குழந்தைகளை கையாள்வது என்பது அத்தனை எளிதல்ல. இந்த கால குழந்தைகளை எவ்வாறு அவர்கள் வழியில் சென்று நம் வழிக்கு கொண்டு வருவது என்பதை, இந்த புத்தகம் எடுத்துக் கூறுகிறது' என்று, ஸ்ரீதேவி அரவிந்தன் முன்னுரையில் சொல்கிறார்.
இப்படி இவர் சொல்லும் போது, எல்லோர் வீட்டிலும் இதே 'கதகளி' தானே நடந்துக் கொண்டிருக்கிறது என்று, பயணத்திலோ, வெளியிடத்திலோ இந்த புத்தகத்தை படிக்கும்போது, இப்போது நம் செல்லம் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார் என்று, நினைவு வீட்டை நோக்கி திரும்பும்.
'விழுந்து விடப் போகிறாய்' என்பதற்கு பதில், 'உன்னால் முடியும்' என்று சொல்லிப் பாருங்கள். அது தன்னம்பிக்கை வழி கொடுக்கும் என்று, அவர்களுக்கான பாதையை காண்பிக்கிறது.
மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யாமல், குழந்தைகளின் லட்சியங்களை அவர்களையே முடிவு செய்ய வைத்து, அதை அவர்களாகவே புரிய வைப்பது என்பது தான், பெற்றோரின் வெற்றி ரகசியம் என, தாரக மந்திரம், அரவணைப்பு, வாழ்க்கை, எதிர்காலம் குறித்து தெள்ளத் தெளிவாக, பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான பாலத்தை, அன்பால் கட்ட முடியும் என, பாலபாடம் நடத்தியிருக்கிறார்.
நம் எதிர்காலம் குழந்தைகள் தானே. அவர்கள் சிறக்க, சிறகு விரிக்க, பறந்து போக, பார் போற்றும் நபராக மாற்றத் தானே இத்தனை மெனக்கெடல். சிறந்ததொரு பாதையில் பயணிக்க, வழிகாட்டுகிறார், ஸ்ரீ தேவி அரவிந்தன்.

