/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை நார் கழிவை நிலத்தில் பரப்புவதால் பாழாகும் நீராதாரம்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
தென்னை நார் கழிவை நிலத்தில் பரப்புவதால் பாழாகும் நீராதாரம்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
தென்னை நார் கழிவை நிலத்தில் பரப்புவதால் பாழாகும் நீராதாரம்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
தென்னை நார் கழிவை நிலத்தில் பரப்புவதால் பாழாகும் நீராதாரம்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 06, 2024 09:50 PM

பொள்ளாச்சி ; 'தென்னை நார் கழிவுகளால் நீர் மாசுபடுகிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்காமல், மாசுகட்டுப்பாட்டு வாரியம் தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசியதாவது:
கோட்டூரில் பல ஆண்டுகளாக இயற்கை வளங்களை சார்ந்து விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக, விவசாய நிலத்துக்கு அருகில் தனியார் தென்னை நார் தொழிற்சாலைகள், நுாற்றுக்கணக்கான லோடு தென்னை நார் கழிவுகளை விவசாய நிலங்களில் மலைபோல குவித்து அதிகளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர்.
நிலத்தடிநீர் பாதிப்பு
இதனால், கிணற்று நீர் மாசடைந்து நிறம் மாறியுள்ளதால், கால்நடைகள் இந்த நீரை குடிப்பதில்லை. கிணற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. தென்னை நார் கழிவுகள் குவித்து வைக்கப்படுகின்ற நிலங்கள், ஆழியாறு ஆற்றில் இருந்து கேரளா எல்லை வரை செல்லும் வேட்டைக்காரன்புதுார் கால்வாய்க்கு மேல் மட்ட அளவில் அமைந்துள்ளது.
தென்னை நார் கழிவில் இருந்து வரும் கழிவுநீர், கால்வாயில் செல்லும் பாசன நீருடன் கலந்து செல்வதால் அனைத்து விவசாய நிலங்களும் பாதிப்படைந்து, மக்களின் குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும்.
கழிவுநீர் கலந்த தண்ணீரை மக்கள் குடிப்பதால் உடல் நலம் மிக கடுமையாக பாதிக்கும். தென்னை நார் கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை நார் தொழிற்சாலைகள் எந்த பட்டியலில் இருந்தாலும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. ஏதாவது ஒரு காரணத்தை மட்டும் கூறி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் எங்களுக்கு இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என எழுதி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
நிரந்தர தீர்வு தேவை
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பேசுகையில், ''தென்னை நார் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது என பலமுறை புகார் தெரிவித்தாலும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதற்குரிய தீர்வு காண கோரிக்கை விடுத்தால், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் ஏதாவது ஒரு காரணத்தை மட்டும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க தவிர்க்கின்றனர். நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே நிலத்தடிநீர் மாசுபாட்டை தவிர்க்க முடியும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த சப் - கலெக்டர், ''குழு அமைத்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக் கப்படும்,'' என்றார்.நாய்கள் தொல்லை
விவசாயிகள் பேசுகையில், 'தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை முறையாக புதைக்காமல் அப்படியே போடுவதால், நாய்கள் அவற்றை இழுத்து வருகின்றன.
மேலும், இறைச்சி கழிவுகளும் ரோட்டில் வீசப்படுவதால், அவற்றை உட்கொள்ள நாய்கள் கூட்டமாக திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், ரோட்டில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன.
இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். சப் - கலெக்டர் கூறுகையில், ''இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கடைகளுக்கு அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் வாயிலாக நோட்டீஸ் வழங்க வேண்டும். நிபந்தனைகள் விதிப்பதுடன், எந்த இடத்தில் கழிவு கொட்ட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்,'' என்றார்.