/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா கோலாகலம்
/
ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா கோலாகலம்
ADDED : ஏப் 07, 2025 05:34 AM

கோவை; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் நேற்று நடந்த ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழாவில் பல ஆயிரக்கணக்கானபக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர்.
ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் கடந்த மார்ச், 28 அன்று காலை திருமஞ்சனத்துடன் உற்சவம் துவங்கியது. மாலை 5:30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, யஜமானசங்கல்பம், விஷ்வக்சேனர் ஆராதனை, வாசுதேவ புன்யாஹவாசனம், கருடப்பிரதிஷ்டை ஆகியவை நடந்தது.
மார்ச்.,29 முதல் ஏப்., 5 வரை ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு திருவாராதனம், திருமஞ்சனம், சதுஸ்தானார்ச்சனம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, சிம்ஹ, சேஷ, ஹனுமந்த, கருட, கஜ வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீராமநவமியான நேற்று ராமர் கோவிலில் காலை 7:00 மணிக்கு, சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி, புஷ்பகவிமானம் புறப்பாடு, தீர்த்தவாரி, துவாதசராதனம், சதுஸ்தானார்ச்சனம், மஹாபூர்ணாஹூதி ஆகியவை நடந்தது.
கருவறையில் வீற்றிருக்கும் சீதா, சமேத ராமர் லட்சுமண ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். கருவறைக்கு உள்ளேயும் வெளியேயும் பல வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
கோவில் உள்மண்டபம், அர்த்தமண்டபங்களிலும் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் சன்னிதிகளிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவிலுக்கு வடகிழக்கில் இருக்கும் நவகிரஹங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கோவிலுக்கு வடக்கில் உள்ள ஆபத்சஹாய லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீராமநவமியை ஒட்டி நீண்ட வரிசையில் சுமார் ஒரு கி.மீ.,துாரத்துக்கு பக்தர்கள் நின்று சுவாமியை தரிசித்தனர்.
சீதா லட்சுமண சமேத ராமச்சந்திர மூர்த்தி உற்சவராக கோவிலுக்கு தென் கிழக்கிலுள்ள மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தார். அங்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு குங்குமமும், பிரசாதமாக பானக்கமும் வழங்கப்பட்டது.
பெரியகடைவீதியிலுள்ள லட்சுமிநாராயணவேணுகோபாலசுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்ம பெருமாள், சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, பாப்பா நாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் கரிவரதராஜபெருமாள் கோவில், கொடிசியா அருகே உள்ள வெங்கடாஜலபதி கோவில்களில் நேற்று ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

