/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்க்கைத்துணைக்கு முழுவதுமாக விட்டுக்கொடுக்க வேண்டும் கோவையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு
/
வாழ்க்கைத்துணைக்கு முழுவதுமாக விட்டுக்கொடுக்க வேண்டும் கோவையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு
வாழ்க்கைத்துணைக்கு முழுவதுமாக விட்டுக்கொடுக்க வேண்டும் கோவையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு
வாழ்க்கைத்துணைக்கு முழுவதுமாக விட்டுக்கொடுக்க வேண்டும் கோவையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு
ADDED : மார் 03, 2024 12:00 AM

கோவை;வாழ்க்கையில் சுயநலமாக இருந்தால் விவாகரத்து நடக்கிறது. எதுவாக இருந்தாலும், வாழ்க்கை துணைக்கு முழுவதுமாக விட்டுக் கொடுக்க வேண்டும், என, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசினார்.
கோவை, கொடிசியா அருகில் வாழும் கலை அமைப்பின் சார்பில், 'தியானிக்கிறது கோவை' என்ற நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. முன்னதாக நடந்த, 'போதையில்லா இந்தியா' இயக்கம் துவக்க விழாவில்,'நான் போதை பொருளை எடுக்கவும் மாட்டேன்; எடுக்க விடவும் மாட்டேன்' என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:
போதை பொருட்களை விட, தியானம் மேலானது. தியானத்தால் நுாறுக்கும் மேற்பட்ட பயன்கள், நன்மைகள் உள்ளன. தியானம் மிகவும் அவசியம். நம் மனதில் வரும் டென்ஷனை துாசாக நினைத்து துாக்கி போட வேண்டும்.
வாழ்க்கையில் மாற்ற முடியாததை, கர்மா என நினைக்கிறோம். நினைத்தது கிடைக்கவில்லை என்றால், மகிழ்ச்சியடைய வேண்டும். சில நடக்கலாம்; சில நடக்காமல் போகலாம். அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் சுயநலமாக இருந்தால் விவாகரத்து நடக்கிறது. எதுவாக இருந்தாலும், வாழ்க்கை துணைக்கு முழுவதுமாக விட்டுக் கொடுக்க வேண்டும்.
இருவருக்கும் இடையே புரிதல் வேண்டும். பொறுமை இல்லாததால் சின்ன, சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்கி விடுகின்றனர். பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இரவு தூங்கும் முன், எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். தினமும் தியானம் செய்தால் மட்டும் போதும். இறையின் உணர்வு நமக்குள் வரும்.
எது புதியதாக வருகிறதோ, அதன் மீது ஈர்ப்பு இருக்கும். போனில் சமூக வலைதள அடிமைத்தனம் விரைவில் மறையும். இதை மறக்க, தினமும் நேரத்தை குறையுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ரவிசாம், சிறுதுளி அறங்காவலர் வனிதா மோகன், பாலசுப்ரமணியம், சக்தி குழும தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

