ADDED : செப் 27, 2026 08:52 PM

கோவை: புனித மைக்கேல் அதிதுாதர் பேராலய தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தேர்த்திருவிழாவை ஒட்டி பெரிய கடைவீதியிலுள்ள, புனித மைக்கேல் அதிதுாதர் பேராலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பத்து நாட்களுக்கு முன், புனித மைக்கேல் அதிதுாதர், பேராலய கொடிமரத்தில் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் கொடியேற்றி வைத்தார். அன்றாடம் நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலியும், ஜெபமாலை நவநாள் பிரார்த்தனையும், மாவட்ட அருட்பணியாளர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.
மின்விளக்குகள், மலர்களால் அலங்கரித்த தனி தேரில், புனித மைக்கேல் அதிதூதர் மற்றும் புனித மாதா சொரூபத்திலான சிலைகளை எழுந்தருளச்செய்தனர்.
மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு பிரார்த்தனைக்குப்பின் தேர்த்திருவிழாவை துவக்கி வைத்தார். சர்ச்சிலிருந்து புறப்பட்ட தேர், பெரியகடைவீதி, வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு, ஈஸ்வரன் கோயில் வீதி, சாமராவ் வீதி, கிறிஸ்தவர் வீதி வழியாக மீண்டும் பேராலயத்தை அடைந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
