/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்
/
பாரதியார் பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 28, 2025 09:57 PM
கோவை; தற்காலிக பெண் ஊழியருக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் பணி மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து, போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பாரதியார் பல்கலையில், நிரந்தர பணியாளர்கள் தவிர, டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள், ஜூனியர் இன்ஜினியர்கள், எலக்ட்ரீசியன்கள் என, தற்காலிக பணியாளர்களாக, 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பணிபுரியும், பெண் ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. அப்பெண் பணிமாறுதல் செய்யப்பட்டார். இதைக்கண்டித்து பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில்,''பெண் ஊழியருக்கு பணி நீட்டிப்பு வழங்காததால், ஊதியம் இன்றி கடும் அவதிக்குள்ளானார். இந்நிலையில், அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலையின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் காரணம்.
இதைக்கண்டித்தே போராட்டம் நடத்தப்பட்டது. பெண் தொழிலாளி என்றுக்கூட பார்க்காமல், அவரை கடுமையாக பேசியுள்ளனர். பதிவாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த கட்டப்போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.