/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யூ டேர்ன்' நிரந்தர கட்டமைப்பு அமைக்காமல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம்
/
'யூ டேர்ன்' நிரந்தர கட்டமைப்பு அமைக்காமல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம்
'யூ டேர்ன்' நிரந்தர கட்டமைப்பு அமைக்காமல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம்
'யூ டேர்ன்' நிரந்தர கட்டமைப்பு அமைக்காமல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம்
ADDED : மே 29, 2025 11:56 PM
கோவை; கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி பரிந்துரைத்த இடங்களில் கூட, இன்னும் 'யூ டேர்ன்' கட்டமைப்பு அமைக்காமல், மாநில நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக செயல்படுகிறது.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஹோப்ஸ் காலேஜ் ரயில்வே பகுதியில் அமைப்பதற்கான இரும்பு கர்டர்கள், ஹைதராபாத்தில் இருந்து தருவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம், 40 கர்டர்கள் தேவை; இதுவரை, 27 கர்டர்கள் வந்து விட்டன.
இறங்கு தளம், ஏறுதளம் அமைத்தல், விடுபட்ட இடங்களில் மழை நீர் வடிகால் கட்டுதல், மையத்தடுப்பு அமைத்தல், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தானியங்கி சிக்னல் முறையை அகற்றியதால், ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல, 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டது. நிற்காமல் செல்வதற்கான வாய்ப்பு உருவானதால், வாகன ஓட்டிகளிடம் வரவேற்பை பெற்றது. அதனால், அண்ணாதுரை சிலை பகுதியை தவிர, கே.எம்.சி.ஹெச்., வரை 'யூ டேர்ன்' அமைக்கப்பட்டது.
அதில், ஜி.ஆர்.ஜி., கல்லுாரிக்கு எதிரே மட்டுமே நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மையத்தடுப்புகள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, எந்தெந்த இடங்களில், 'யூ டேர்ன்' வசதி செய்ய நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.
சாலை சந்திப்புகளை மேம்படுத்துவதற்கென நிதியும் ஒதுக்கப்பட்டது. மிக முக்கியமாக, சி.ஐ.டி., கல்லுாரிக்கு எதிரே, ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் அருகே மற்றும் பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் ஸ்டாப் அருகே ஆகிய மூன்று இடங்களில் முதல்கட்டமாக இவ்வசதிகள் ஏற்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துறையினரின் அலட்சியத்தால், இன்று வரை கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சி.ஐ.டி., கல்லுாரி முன் 'யூ டேர்ன்' அமைப்பதற்கு சாலை பாதுகாப்பு குழுவினர் அளவீடு செய்து கொடுத்துள்ளனர். இரு நாட்களாக மழை பெய்து வருவதால், அப்பணியை துவக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக, ஹோப் காலேஜ் பகுதியில் மேற்கொள்ளப்படும். மற்ற இடங்களில் எங்கெங்கு தேவையென அறிந்து, படிப்படியாக செய்யப்படும்' என்றனர்.